தொடரும் முஸ்லிம் விரோதப் போக்கு – தமிழ்நாடும் காவிமயம் ஆகின்றதா? தடைபோடுமா த.வெ.க அரசு?

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கேள்வி.பத்திரிகை அறிக்கை.நாள்: 27.06.2026. இவண்,பொறையார் அலி அஹமது,துணைப் பொதுச்செயலாளர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர்,தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) .

2 minutes

Read Time

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கேள்வி.
பத்திரிகை அறிக்கை.
நாள்: 27.06.2026.

    இந்தியாவைப் பொறுத்த வரை இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை.
         பல்லாயிரம் ஆண்டு காலம் இம்மண்ணின் மைந்தர்களை சனாதன வர்ணாசிரமத்தின்படி கல்வி கற்க விடாமல் ஒதுக்கி, ஒடுக்கி வைத்திருந்த ஆதிக்க சாதியினரின் அநீதிக்கு பரிகாரம் காணும் விதமாகத்தான்  இடஒதுக்கீடு கொள்கையின் மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சமவாய்ப்பும், சமநீதியும் வழங்கி சமூகநீதி நிலை நாட்டப்பட்டது. 
      ஆனால், பாசிச பாஜக ஒன்றிய அரசு அமைந்த பிறகு இடஒதுக்கீட்டின் தார்மீக நோக்கமே சிதைக்கப்பட்டு, ஏற்கனவே சமூக அடுக்கின் மேல்தட்டில் உள்ள குறிப்பிட்ட ஆதிக்க சாதியினருக்கு அனுகூலமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
       அதற்கேற்றவாறு பல காவி சிந்தனாவாதிகள் நீதித்துறைக்குள் நுழைக்கப்பட்டு உயர்சாதியினருக்கான EWS இடஒதுக்கீடு போன்ற பாரபட்சமான தீர்ப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றது.
     அதன் தொடர்ச்சியாக, பிற மதங்களின் BC, MBC, SC பிரிவுகளில் இருந்து முஸ்லிம்களாக மதம் மாறி வந்தவர்களை (BCM) பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களாகக் கருத வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் அரசாணை, அதனை அங்கீகரித்த உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு ஆகியவற்றிற்கு தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
      ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் வந்த சில குறிப்பிட்ட நீதிபதிகள்  முஸ்லிம்களுக்கு எதிராக துவேசம் காட்டிவருது உலகறிந்த உண்மையாக இருக்கும் போது இப்போதைய தவெக அரசு இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் கவனம் செலுத்தாமல் மிகவும் அசட்டையாக நடந்து கொண்டிருப்பது தற்செயலா? திட்டமிட்டதா?
             கடந்த மாதமே முஸ்லிம்களாக மதம் மாறிய பிற மதத்தவரை BCM-ஆக அங்கீகரிக்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யப் போவதாக குறிப்பிட்ட அந்த நீதிபதி அறிவித்த பிறகும் கூட அதற்கேற்றவாறு உரிய எதிர்மனுவைத் சமர்பிக்காமலும், அதற்கான கால அவகாசம் கோராமலும், ஏற்கனவே முந்தைய இருநீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பிற்கு மாற்றமாக இந்த இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளிப்பது சட்டத்திற்கும், நீதிமன்ற மரபிற்கும் முரணானது;  இரண்டிற்கும் கூடுதலான எண்ணிக்கை கொண்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் இருநீதிபதிகள் அமர்வு தீர்ப்பினை மாற்ற இயலும் என்பதை விளக்கி வாதம் வைக்காததும்,  அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆகாமலும், கூடுதல் தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜர் ஆகாமல் இணையவழியில் வந்து சொதப்பியதும் தவெக அரசின் இயலாமையா? அல்லது இந்த அரசின் அங்கமாக உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளின் திட்டமிட்ட சதியா?
         சமூகநீதி தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை இந்த அரசு கையாண்ட விதம் கண்டனத்திற்குரியது; கவலைக்குரியது.
      தனது அரசை உண்மையான சமூகநீதி அரசு என அழைத்துக் கொள்ளும் முதலமைச்சர் இதனைக் கவனத்தில் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தகுந்த வழிகாட்டுதல் வழங்கி முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கேட்டுக்கொள்கிறது.

இவண்,
பொறையார் அலி அஹமது,
துணைப் பொதுச்செயலாளர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) .

About the Author