இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று மத சுதந்திரம். ஒவ்வொரு தனிமனிதரும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, பிரச்சாரம் செய்ய நமது அரசியல் சாசனம் அனுமதிக்கிறது.
ஒருவருடைய மதநம்பிக்கை அடிப்படையிலான அனுஷ்டானம் பிறருக்கு பாதிப்போ, பொது அமைதிக்குக் குந்தகமோ ஏற்படுத்தாத வரையில் அதில் தலையிட நீதிமன்றம் உட்பட யாருக்கும் உரிமையில்லை என்பதே நமது அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள மத உரிமை.
ஆனால், பாசிச சக்திகள் அரசியல் அதிகாரம் பெற்றதில் இருந்து, முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமைகளில் அத்துமீறி தலையிட்டு சமூகப் பதட்டத்தை ஏற்படுத்துவது வழமையாகி வருகிறது.
அந்த வகையில் கோவையைச் சேர்ந்த இந்துத்துவ மதவெறியன் ஒருவன் சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக்கால நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கைத் தாக்கல் செய்து பொது இடங்களில் பசுவை அறுப்பதற்கு தடை கோரி இருக்கின்றான்.
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் உள் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை அனுதித்ததே தவறு. இதேபோன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை அதனுடைய உள்நோக்கம் அறிந்து உச்சநீதிமன்றம் அதை அவசர வழக்காக ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில், அதனை முன்மாதிரியாகக் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் கோவை மதவெறியனுக்கு உறுதுணையாக ஒரு அநியாயத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை பக்ரீத் பண்டிகையில் பொதுவாக ஆடு, காளை மாடு ஆகியவையே குர்பானி கொடுக்கப்பட்டு அவற்றின் இறைச்சி ஏழை, எளியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஆனால், பொது இடங்களில் பசுக்களை அறுக்கத் தடை என்ற போர்வையில் முஸ்லிம்களின் அடிப்படையான மத உரிமையை மறுக்கும் வகையில் ஒரு தடை உத்தரவை அவசர, அவசரமாக பிறப்பித்துள்ளது நீதிமன்ற அமர்வு.
இதுபோன்ற தடை உத்தரவுகளுக்கு பொதுவாக மேற்கோள் காட்டப்படும் Prevention of Cruelty to Animals (Slaughter house) Rules – 2001என்ற விதியின் உட்பிரிவு 3-ன் கீழ் இறைச்சிக்காக அறுக்கப்படும் விலங்குகள் உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அறுவைக் கூடங்களில் மட்டுமே அறுக்கப்பட வேண்டும். சினைப்பருவத்தில் உள்ள பசுக்கள், மூன்று மாதத்திற்குட்பட்ட கன்றுகளுக்கு பாலூட்டும் பசுக்கள், மூன்று மாத வயதிற்குட்பட்ட கன்றுகள் ஆகியவற்றை அறுக்கக் கூடாது.
ஆனால், இந்த நிபந்தனைகள் அனைத்தும் வியாபார ரீதியிலான இறைச்சி விற்பனைக்காக அறுக்கப்படுபவற்றிற்கானவை ஆகும்.
மதரீதியிலான கடமைகளுக்கு இவை பொருந்தாது.
சட்டம் பயின்ற நீதிபதிகள் இவற்றை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இருந்தபோதிலும் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையிலான இதுபோன்ற மதவெறி முயற்சிகளுக்கு நீதிமன்றம் துணை போவது வருந்தத்தக்கது.
அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை மத உரிமையை மறுக்கும் அமர்வின் இந்தத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என முதன்மை நீதிபதியை கேட்டுக் கொள்கிறது NTF.
இதற்கு வாய்ப்பில்லாதபட்சத்தில், உச்சநீதிமன்றத்தை அணுகி மேல் முறையீடு செய்து இந்தத் தடையை நீக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; முந்தைய திமுக அரசு இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் துரிதமாக செயல்பட்டு நீதியை நிலைநாட்டியதை தற்போதைய தமிழக அரசுக்கு நினைவூட்டுகிறது NTF.
மேலும், திருப்பரங்கன்றம் சிக்கந்தர் மலை தர்கா நில ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பான வழக்கில் முஸ்லிம்களுக்கு விரோதமாக, இயற்கை நீதிக்கு முரணாக தீர்ப்பு வழங்கி சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத்த அதே நீதிபதி இந்த அமர்விலும் இடம்பெற்றிருப்பதை சுட்டிக் காட்டும் NTF, தொடர்ந்து மதமாச்சரியத்தோடு செயல்படும் அவரிடம் ஒருபோதும் நீதியை எதிர்பார்க்க இயலாது என்பதால் அவரை Impeachment மூலம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறது NTF.
இவண்,
பொறையார் அலி அஹமது,
துணைப் பொதுச்செயலாளர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)











